திருவொற்றியூரில் வெல்டிங் பணியின்போது 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தது
திருவொற்றியூரில் வெல்டிங் பணியின்போது 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தது.
திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை காலி டிரைலர் லாரியில் கடை ஊழியரான மகேஷ் (வயது 26) என்பவர் வெல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வெல்டிங் எந்திரத்தில் இருந்து தீப்பொறி பறந்து டீசல் டேங்கில் பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் மகேசுக்கு கையில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்து ஓடி வந்தார். இதனை கண்டதும், கடையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற ஊழியர்களும் வெளியே ஓடிவந்துவிட்டனர்.
அதற்குள் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் பழுது பார்ப்பதற்காக அதன் பின்னால் நிறுத்தி இருந்த மற்றொரு லாரிக்கும் தீ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர், திருவொற்றியூரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 லாரிகளில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் 2 லாரிகளும் எரிந்து நாசமாயின.
காயமடைந்த மகேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.