ரேஷன் கடையில் கடத்த முயன்ற 2 டன் அரிசி பறிமுதல்
சிவகாசியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற 2 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து கடத்த முயன்ற 2 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பராசக்தி காலனி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பராசக்தி காலனியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் முன்பு நேற்று காலை 9 மணிக்கு ஒரு சரக்கு வாகனம் நின்றுள்ளது. அப்போது ரேஷன் கடையில் இருந்து ஒருவர் அரிசி மூடைகளை கொண்டு வந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி உள்ளார்.
அப்போது அங்கு வந்த மாநகராட்சி கவுன்சிலர் தங்கபாண்டியம்மாள், இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் மும்தாஜ்பேகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த தங்கபாண்டியம்மாள் இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
கடத்தல்
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரேஷன் கடை ஊழியர் மும்தாஜ்பேகம், சரக்கு வாகன டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூடைகளை கோவில்பட்டியில் உள்ள ஒரு குடோனுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விருதுநகரில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து சரக்கு வாகனத்தில் இருந்த அரிசி மூடைகளை ஆய்வு செய்தனர். இதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கடந்த காலங்களில் ரேஷன் கடையில் வாங்கப்படும் அரிசிகள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கடத்தி வந்தனர்.
ஆனால் தற்போது ரேஷன் கடையில் இருந்தே அரிசிகள் கடத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.