டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில் அருகே டெம்போவில் குடிநீர் பாட்டில்களுக்கு அடியில் பதுக்கி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே டெம்போவில் குடிநீர் பாட்டில்களுக்கு அடியில் பதுக்கி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் பொருட்கள் கடத்தல்
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. அதனை தடுக்க வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நாகர்கோவில் அருகே உள்ள பீச்சாங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டெம்போ வந்தது. டெம்போவை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்காமல் சென்றது. உடனே வாகனத்தில் விரட்டி சென்ற போலீசார் சிறிது தூரத்தில் டெம்போவை மடக்கினர்.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து டெம்போவில் போலீசார் சோதனை செய்தபோது, குடிநீர் கேன்கள் மற்றும் பாட்டில்களாக இருந்தன. அவற்றை அகற்றிவிட்டு பார்த்தபோது சிறு, சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் குடிநீர் பாட்டில்களுக்கு அடியில் 2 டன் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக டெம்போ டிரைவர் நாகர்கோவில் வாகையடி தெருவை சேர்ந்த பொன்னையா (வயது 50) மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த பெருமாள் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் டெம்போவுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.