கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பூதப்பாண்டி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
அழகியபாண்டியபுரம்,
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பூதப்பாண்டி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ரேஷன் அரிசி கடத்தல்
தமிழ்நாட்டில் ரேஷன் கடையில் கொடுக்கும் இலவச அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்க குமரி மாவட்டத்தில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே போல் வருவாய்த்துறை அதிகாரிகளும் ரோந்து சென்றும், தங்களுக்கு வரும் தகவலின் அடிப்படையிலும் கடத்தப்படும் அரிசியை பறிமுதல் செய்கிறார்கள்.
2 டன் பறிமுதல்
இந்தநிலையில் தோவாளை வட்ட வழங்கல் அதிகாரி அதிவீரராம பாண்டியனுக்கு ஆரல்வாய்மொழியில் இருந்து துவரங்காடு வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும் தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கையின் பேரில் பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் சென்ற டெம்போ தடுத்து நிறுத்தப்பட்டது. டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். டெம்போவை சோதனை செய்த போது, அதில் சிறு,சிறு மூடைகளில் 2 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அவற்றை டெம்போவுடன் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி குறித்து விசாரணை நடத்திய போது அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அதை கடத்தியது யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பின்னர் 2.2 டன் ரேஷன் அரிசி கோணத்தில் உள்ள குடோனில் ஒப்படைக்கப்பட்டது.