2 புலிகள் மர்ம சாவு


தினத்தந்தி 10 Sept 2023 5:30 AM IST (Updated: 10 Sept 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி

அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 புலிகள்

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக தீவன பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுடன் மோதல், நோய் உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு அருகில் நேருநகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் விசாரணை

இதையடுத்து நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் கிருஷ்ணகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புலிகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அவலாஞ்சி வனப்பகுதியில் 2 பெண் புலிகள் இறந்து உள்ளன. அவை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும். புலிகளின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. நாளை (அதாவது இன்று) பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகளின் மாதிரிகள் கோவை மற்றும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னர் தான் 2 புலிகள் இறந்ததற்கான முழு விவரம் தெரியவரும் என்றனர்.

ஒரு மாதத்தில் குட்டிகள் உள்பட 6 புலிகள் சாவு

கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரமே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. முதுமலை வனப்பகுதியில் மற்றொரு இடத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. இதேபோல் நடுவட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. இந்தநிலையில் தற்போது அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 6 புலிகள் இறந்து உள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story