வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி தொடக்கம்


வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி தொடக்கம்
x

நாமக்கல் மாவட்டத்தில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி நேற்று முதல் தொடங்கியது. தபால் நிலையங்களை பொறுத்த வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. ஆனால் டெபாசிட் செய்யலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

நாமக்கல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

மத்திய ரிசர்வ் வங்கி தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. இந்த நோட்டுகளை நேற்று முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்து இருந்தது. வங்கிகள் தயார் நிலையில் ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளை வைத்திருந்தாலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒருசில வங்கிகளில் இதற்கென தனியாக கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டு இருந்தது. இதர வங்கிகளில் வழக்கமான கவுண்ட்டர்களிலேயே மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான நபர்கள் தங்கள் சேமிப்பு கணக்குகளில் தங்களிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதை பார்க்கமுடிந்தது.

ஏ.டி.எம். எந்திரங்களில் செலுத்த முடியாது

இது குறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது தங்களிடம் உள்ள ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மாற்ற ஏராளமான நபர்கள் வங்கிக்கு படையெடுத்து வந்தனர். ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகளை பொறுத்த வரையில் பெரும்பாலான நபர்களிடம் இல்லை. எனவே வங்கிகளில் கூட்டம் இல்லை. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள், தங்களது சேமிப்பு கணக்கில் ரூ.50 ஆயிரம் வரை பான்கார்டு நம்பர் இல்லாமலும், அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் பான்கார்டு நம்பருடனும் டெபாசிட் செய்யலாம்.

வங்கி கணக்கு இல்லாத நபர்கள் ஒரு நாளில் 10 எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை பொறுத்த வரையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஏ.டி.எம். எந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்தவும், எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டு விட்டது. அதாவது, தொழில்நுட்ப ரீதியாக ஏ.டி.எம். எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு விட்டன. எனவே அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறிவிப்பு பலகை

தபால் நிலையங்களை பொறுத்த வரையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாது. ஆனால் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், டெபாசிட் செய்யவும் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. எனவே தபால் நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவேஇருந்தது.


Next Story