மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 10:25 AM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 'வீலிங்' செய்தபோது மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரியை சேர்ந்தவர் சபரி (வயது20). கர்நாடக மாநிலம், பெங்களூரு சர்ஜாபுராவை சேர்ந்தவர் ஸ்ரீஹர்ஷா (27). இவர்கள் மத்திகிரியை சேர்ந்த தவ்பிக் கான் (23) மற்றும் நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை ஓசூர் வந்தனர்.

பின்னர் அதிகாலை அவர்கள் 5 மோட்டார் சைக்கிள்களில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தனர். அப்போது அவர்கள் மோட்டார்சைக்கிளில் 2 கைகளை விட்டபடியும், முன்சக்கரத்தை மேலே தூக்கி 'வீலிங்' செய்தபடியும் ஓட்டி வந்தனர்.

2 பேர் பலி

இதில் யார் நீண்ட தூரம் 'வீலிங்' செய்கிறார்கள் என்றும், வேகமாக செல்கிறார்கள் என்றும் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளை ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் தாறுமாறாக ஓட்டியபடியும் 'வீலிங்' செய்தபடியும் வந்தனர். அப்போது பந்தாரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார்சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் சபரி, ஸ்ரீஹர்ஷா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தவ்பிக் கான் படுகாயம் அடைந்தார்.

தீவிர சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவ்பிக் கானை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போலீசார், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story