சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் விடுதிக்கு தாமதமாக வந்ததை வார்டன் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்றனர்.
சென்னை,
சென்னை வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வந்த மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவியும், வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவியும் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்த வேதிப்பொருளை விடுதிக்கு எடுத்து வந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் 2 பேரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் 2 மாணவிகளும் கண்விழித்தனர். தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரணம் என்ன?
2 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-
மாணவிகள் 2 பேரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். கல்லூரி விடுமுறை நாட்களில் வெளியே சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு கடந்த மாதம் வெளியே சென்று விடுதிக்கு திரும்பும்போது காலதாமதமாகி இருக்கிறது. இதனால் 2 பேரையும் விடுதி வார்டன்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் மாணவிகளின் பெற்றோருக்கும் செல்போனில் தகவல் சொல்லி இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய பெற்றோரும் செல்போனில் கடுமையாக கண்டித்துள்ளனர். இதை அவமானமாக கருதிய மாணவிகள் 2 பேரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த உலகில் வாழப் பிடிக்கவில்லை என்று மதுரை மாணவி சக மாணவிகளிடம் தொடர்ந்து சொல்லி வந்துள்ளார்.
இந்தநிலையில் அவர், மருத்துவ ஆராய்ச்சி கூடத்தில் இருந்த 'மெர்குரி சல்பைட்' என்ற வேதிப்பொருளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துள்ளார். முதலில் இந்த வேதிப்பொருளை மதுரை மாணவி சாப்பிட்டுள்ளார். இதை பார்த்த வேலூர் மாணவியும் அதை வாங்கி சாப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து மயங்கிய 2 பேரையும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சக மாணவிகள் காப்பாற்றி உள்ளனர்.
போலீஸ் கமிஷனர் பேட்டி
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் நேற்று நிருபர்கள் கேட்டதற்கு, ' இந்த மாணவிகள் 2 பேரும் விடுதிக்கு தாமதமாக வந்ததால் வார்டன் கேள்வி கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த சம்பவம் நடந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகளிடம் வாக்குமூலம் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.