கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர்

குமராட்சி,

பட்டம் விட்ட மாணவர்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சபரிவாசன் (வயது 10). அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த கணேசன் மகன் யோகேஸ்வரன்(9), 2-ம் வகுப்பு படிக்கும் அவனது தம்பி சசிதரன்(7) ஆகியோருடன் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு பட்டம் விட நேற்று மாலை சென்றான். பின்னர் 3 பேரும் அங்கு பட்டம் விட்டு விட்டு, சிறிது நேரத்தில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கினர்

அப்போது ஆற்றுக்குள் ஆழமான பகுதிக்கு சென்ற சபரிவாசனும், யோகேஸ்வரனும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கரையோரம் நின்று குளித்துக் கொண்டிருந்த சசிதரன் வீட்டுக்கு ஓடிச் சென்று, சபரிவாசன், யோகேஸ்வரன் ஆற்றில் மூழ்கியது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதைகேட்டு பதறிய இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராம இளைஞா்கள் ஓடி வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மாணவர்கள் 2 பேரையும் தேடினர். அதன்பிறகு சிறிது நேரத்தில் யோகேஸ்வரன் பிணமாக மீட்கப்பட்டான். தொடர்ந்து அவனது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

டாக்டர் பணியில் இல்லாததால் வாக்குவாதம்

இதனிடையே அடுத்த சில நிமிடங்களில் மயக்க நிலையில் சபரிவாசனை மீட்ட இளைஞர்கள் சிகிச்சைக்காக குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த சபரிவாசனின் பெற்றோர், கிராம மக்கள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சபரிவாசனை அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், சபரிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்ட பெற்றோர், சபரிவாசன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சோகம்

இதனிடையே இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீசார் வெள்ளூருக்கு விரைந்து சென்று, யோகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story