வக்கீல் கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த 2 ரவுடிகள் துப்பாக்கிமுனையில் கைது - தப்பி ஓடியபோது கால் முறிந்தது
வக்கீல் கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த சென்னையைச் சேர்ந்த 2 ரவுடிகள் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டனர். முன்னதாக தப்பி ஓடியபோது இருவருக்கும் கால் முறிந்தது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஈஷா என்ற ஈஸ்வரன் (வயது 33) மற்றும் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38). ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.
வடசென்னை பகுதியில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஷெட்டுகளில் மாமூல் வசூலிப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
2017-ம் ஆண்டு திருப்பூரில் வக்கீலான காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஷா, யுவராஜ் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.
தலைமறைவான ரவுடிகள் ஈஷா, யுவராஜ் இருவரையும் போலீசார் தேடிவந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று தெரியாமல் இருந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யாபாரதி உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் இருவரும் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைந்து சென்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து உள்ளே புகுந்தனர். போலீசாரை கண்டதும் ஈஷா, யுவராஜ் இருவரும் அங்குள்ள சுவரை தாண்டி குதித்து தப்பிச் செல்ல முயன்றனர். இதில் அவர்களது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் துப்பாக்கிமுனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கைதான ஈஷாவும், யுவராஜும் பெங்களூருவில் பதுங்கி இருந்தபடி சென்னையில் இருக்கும் தொழில் அதிபர்களை 'சாட்டி லைட்' போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் வாங்குவது, கொலை திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை சென்னையில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களை சென்னை அழைத்து வந்து யார்? யாரை? மிரட்டி பணம் பறித்தனர்?, கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலில் முறிவு ஏற்பட்டு இருப்பதால் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு காலில் மாவு கட்டுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது, சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.