கார் மோதி 2 மின்கம்பங்கள் சேதம்
ஆறுமுகநேரியில் கார் மோதி 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
ஆறுமுகநேரி:
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 59). இவர் அப்பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் புறப்பட்டார். காரில் அவர் உள்பட 6 பேர் இருந்தனர். காரை பொன்முருகன் ஓட்டி வந்தார்.
ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள திருமண மண்டபத்திற்கு அருகே வரும்போது கார் திடீரென நிலை தடுமாறியது. இதனால் ரோட்டின் இடதுபுறம் உள்ள இரும்பு மின்கம்பத்தின் மீது கார் வேகமாக மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்து விழுந்தது. மேலும் அதன் அருகே நின்ற காங்கிரீட் மின்கம்பமும் முறிந்ததது. அதிர்ஷ்டவசமாக உடனே மின்தடை ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் கார் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே கோவில் கொடை நடந்து கொண்டு இருந்ததால், கொடைக்கு வந்தவர்கள் உடனடியாக ஓடி வந்தனர். காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 2 பேருக்கும் மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நகரப்பஞ்சாயத்து ஊழியர்களும், ஆறுமுகநேரி மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மின்கம்பங்களில் இருந்து ரோட்டில் தொங்கிய மின் வயர்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 16 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெப சாம் மற்றும் ஊழியர்கள் சேதம் அடைந்த இரும்பு மின்கம்பத்தை அகற்றி, புதிதாக ஒரு மின்கம்பத்தை நட்டினர்.