தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் உள்பட 2 பேர் கைது


தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் உள்பட 2 பேர் கைது
x

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

தாபழூர்:

விற்க முயற்சி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின்(வயது 60). ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கீழகுடியிருப்பை சேர்ந்த சங்கரின் மகன் கொளஞ்சிநாதன், அந்த நிலத்தை வாங்குவதற்கு விலை பேசி முடித்துள்ளார்.

இதையடுத்து பத்திரப்பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தபோது சொத்து மார்ட்டினின் தந்தை ஆரோக்கியத்தின் பெயரில் இருந்தது தெரியவந்தது. ஆரோக்கியம் மரணமடைந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சொத்துக்கள் முறைப்படி மார்ட்டினின் பெயருக்கு மாற்றப்படாமல் இருந்துள்ளது.

போலி ஆவணம்

இதையடுத்து சொத்துக்களை விற்பனை செய்து கொடுக்க தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளையபெருமாள் மகன் இளவரசன் என்ற வக்கீலை தொடர்பு கொண்டு, அவர் மூலமாக மார்ட்டினின் ஆதார் அட்டையில் அவரது தந்தை ஆரோக்கியத்தின் பெயரை போலியாக மாற்றி போலி ஆதார் அட்டை தயார் செய்து அதை கொண்டு பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்துள்ளனர்.

நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு வந்தபோது ஆதார் அட்டையின் நகல் மட்டும் வழங்கப்பட்டநிலையில் அதன் உண்மை நகல் காணாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த தா.பழூர் சார்பதிவாளர் மணிமேகலை அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை கொண்டு மார்ட்டினின் ஆதார் அட்டையை உண்மையானது தானா என்பதை சோதித்து அறிய உத்தரவிட்டுள்ளார். அந்த ஆதார் அட்டையை பரிசோதித்ததில் அந்த ஆதார அட்டைக்கு சொந்தமானவர் மார்ட்டின் என வந்துள்ளது. இதனால் தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தை மார்ட்டின் தனது ஆதார் அட்டையை பெயர் மாற்றம் செய்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து உடனடியாக சார் பதிவாளர் மணிமேகலை தா.பழூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்த மார்ட்டின், பத்திரப்பதிவு செய்வதற்கு பத்திரங்கள் தட்டச்சு செய்து கொடுத்த தட்டச்சர் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மார்ட்டின் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு போலி ஆவணம் தயாரிக்க உதவிய வக்கீல் இளவரசன் பற்றிய தகவல்களை தெரிவித்தார். வழக்கை விசாரித்த போலீசார் மார்ட்டின், தட்டச்சர் சத்தியசீலன்(26), வக்கீல் இளவரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மார்ட்டின், சத்தியமூர்த்தி ஆகியோர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி ஆவணம் தயாரிக்க உதவிய வக்கீல் இளவரசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தா.பழூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story