முகலிவாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைது


முகலிவாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x

முகலிவாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர், 30 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

கொள்ளை வழக்கில் தலைமறைவு

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் இப்ராகிம். 1993-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் இப்ராகிமை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக முத்து, தீர்த்தமலை, மகேந்திரன், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் தீர்த்தமலை மற்றும் முத்து இருவரும் உயிரிழந்தனர். ஜாமீனில் வெளியே வந்த மகேந்திரன் மற்றும் சக்திவேல் இருவரும் அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். 2 பேரையும் பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.

30 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த நிலையில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த மகேந்திரன் (வயது 53) மற்றும் சக்திவேல் (52) இருவரையும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான மகேந்திரன், சக்திவேல் இருவரும் பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பின்னர் மகேந்திரன் பெரும்பாக்கத்தில் 'லிப்ட்' ஆபரேட்டராகவும், சக்திவேல் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வந்தனர்.

வாலிப வயது புகைப்படம்

கொள்ளையில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான போது இருவருக்கும் 22 மற்றும் 23 வயது இருக்கும். அப்போது வாலிபர்களாக இருந்தனர். அதன்பிறகு அவர்களது நெருங்கிய உறவினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்தனர்.

போலீசார் இத்தனை வருடங்களாக இருவரும் கைதான போது எடுக்கப்பட்ட வாலிப வயது புகைப்படத்தை வைத்து தேடி வந்தனர். இதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் இருவரது உறவினர்கள், நண்பர்கள், அவர்களது செல்போன் சிக்னல்களை வைத்து தொடர்ந்து தேடிவந்த போலீசார், 30 ஆண்டுகளுக்கு பிறகு இருவரையும் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story