வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறல் அழிப்பு மலை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
வடுகசாத்து கிராமத்தில் வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறலை அழித்த போலீசார் மாவட்ட எல்லையில் உள்ள மலைப்பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்தனர்.
ஆரணி
வடுகசாத்து கிராமத்தில் வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறலை அழித்த போலீசார் மாவட்ட எல்லையில் உள்ள மலைப்பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்தனர்.
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 40) என்பவரது இடத்தில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் மண்டல துணை தாசில்தார் அய்யப்பன் (மேற்கு), வருவாய் ஆய்வாளர்கள் நித்யா, ரமேஷ், அசோக்குமார் மற்றும் செய்யாறு கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன், வடுகசாத்து கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் போரில் ஒரு பேரலில் சாராய ஊறல் இருந்தது.
மேலும் அவருக்கு சொந்தமான நிலத்தில் 3 பேரல்களில் சாராய ஊறல் மற்றும் சாராயம் இருந்தது. மேலும் சாராயம் காய்ச்சுவதற்கான வெல்லம், டயர் டியூப்கள், பட்டை, பூச்சிமருந்து டப்பாக்களும் சாராயம் ஊற்றி விற்பதற்கான தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் முன்னிலையில் 4 பேரல்களில் இருந்த சாராய ஊறலை அழித்தனர்.
மேலும் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட எல்லை அருகே உள்ள வேதாஜிபுரம் கிராமத்தின் கிழக்கே உள்ள மோகனாவரம் பகுதியில் மலை மீது போலீசாலர் சோதனை நடத்தினர். அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஆற்காடு தாலுகா, வர்கூர் சுரேஷ் (45), ஆற்காடு தாலுகா மேல் நாயக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (52) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 500 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டுகளாகவும், லாரி டியூபில் இருந்தும் கைப்பற்றி அங்கேயே அழித்தனர்.