சரக்கு வாகனம் மீது பஸ் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி; 34 பேர் படுகாயம்


சரக்கு வாகனம் மீது பஸ் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி; 34 பேர் படுகாயம்
x

சரக்கு வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் இருந்து நேற்று காலை 7.50 மணிக்கு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டு வந்தது. பஸ்சை மோகன்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கரப்பாடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) என்பவர் இருந்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பஸ்சில் சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

இதற்கிடையில் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அய்யம்பாளையம் கருப்பராயன் கோவில் பகுதியில் ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பாதையில் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் நோக்கி ஒரு சரக்கு வாகனம் சென்றது. எதிரே அந்த தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது.

2 பேர் பலி

அப்போது, திடீரென அந்த தனியார் பஸ் கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், சாலையின் இடதுபுறமாக சுமார் 50 அடி தூரம் பாய்ந்து தென்னை மரத்தத்தில் மோதி சாய்த்தப்படி தோட்டத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே தனியார் பஸ் மோதியதில் சரக்கு வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. அந்த சரக்கு வாகனத்தை ஓட்டிய நல்லூரை சேர்ந்த டிரைவர் நடராஜன் (50) மற்றும் டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (33) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 23 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 34 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story