ஆசிரியை உள்பட 2 பேர் வீடுகளில் நகை-பணம் திருட்டு
ஆசிரியை உள்பட 2 பேர் வீடுகளில் நகை-பணம் திருட்டுபோனது.
நகை-பணம் திருட்டு
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராஜா (வயது 37). இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், கடந்த 22-ந் தேதி காலை 10.15 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு நானும், எனது மனைவியும் எங்களது குழந்தையை க.எறையூரில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு, காலை 11.15 மணியளவில் வீடு திரும்பினோம். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 2 பவுன் நகையும், ரூ.11 ஆயிரத்து 500 ரொக்கமும் திருட்டு போயிருந்தது.
வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியை வீட்டில்...
இதேபோல் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராமலிங்கத்தின் மனைவி மகேஷ்வரி (44) என்பவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 22-ந்தேதி காலை வழக்கம்போல் நாங்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டோம். பின்னர் மாலையில் நாங்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த முக்கால் பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. எங்கள் வீட்டில் திருடிய மர்மநபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நகை-பணத்தை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.