வெவ்வேறு விபத்துகளில் சுமைதூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் சுமைதூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
x

கொடைரோடு, நத்தம் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சுமைதூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.

திண்டுக்கல்

கொடைரோடு, நத்தம் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் சுமைதூக்கும் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர்.

கார் மோதியது

கொடைரோடு அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்தவர் பாப்புராஜ் (வயது 45). இவர் திண்டுக்கல்லில் உள்ள வெங்காய மண்டியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் அவர் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்காக ஆட்டோ ஒன்றும் வைத்திருந்தார். இந்தநிலையில் இன்று காலை பாப்புராஜ் வேலை முடிந்து, காமலாபுரத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே உள்ள ஊத்துப்பட்டி பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாப்புராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாப்புராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்துபோன பாப்புராஜூவுக்கு சகாயராணி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு விபத்து

இதேபோல் கோபால்பட்டியை அடுத்த பாறைப்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ் முகமது (44). இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அப்பாஸ் முகமது, நேற்று கோபால்பட்டியில் இருந்து நத்தம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நத்தம் அருகே காட்டுவேலம்பட்டி பிரிவு பகுதியில் அவர் வந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்புகம்பியில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாஸ் முகமது உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story