கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x

கடையநல்லூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கல்லூரி மாணவர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மேலப்புளியங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த மகாதேவன் மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் புளியங்குடி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் அருண்குமார் (19).

நேற்று விடுமுறை தினம் என்பதால் அருண்குமார், மணிகண்டனை அழைத்துக் கொண்டு குற்றாலத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார்.

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தை அடுத்த அபாய வளைவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிரே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு கலிங்கப்பட்டியை நோக்கி வேன் வந்து கொண்டு இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அருண்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story