பழ வியாபாரி கொலையில் 2 பேர் கைது
குற்றாலம் அருகே பழ வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் சுடலை (வயது 41). இவர் குற்றால சீசன் காலங்களில் கேரளாவில் இருந்து ரம்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் குற்றால சீசன் தொடங்க உள்ள சூழலில், ரம்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவுக்கு சென்றிருந்தார்.
அப்போது வல்லம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பழ வியாபாரி காளிதாஸ் (44) என்பவரும் அதில் பங்கேற்று ஏலம் கேட்டார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், சுடலை ஏலத்தை எடுத்தார். இதனால் காளிதாசுக்கும், சுடலைக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் உள்ள சுடலைமாடன் கோவில் அருகில் சுடலை நின்றபோது, அங்கு வந்த காளிதாஸ் உள்பட 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சுடலை சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு நாகசங்கர் ஆலோசனைப்படி குற்றாலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், காளிதாஸ் மற்றும் உறவு முறையில் அவரது தம்பியான சங்கர் (39) ஆகியோர் சேர்ந்து சுடலையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் செங்கோட்டை பிரானூர் பார்டரில் நேற்று போலீசார் கைது செய்தனர்.