கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது - போலி வசூல் புத்தகங்கள் பறிமுதல்


கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேர் கைது - போலி வசூல் புத்தகங்கள் பறிமுதல்
x

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களிடம் பணம் வசூலித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. போலி வாகன வரி வசூல் புத்தகங்களை அச்சடித்து அதன் மூலம் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் உத்தரவின் பேரில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கே போலி ரசீது மூலம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமத்தை சேர்ந்த சூர்யா (வயது 28), நாகராஜ் (19) ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி வாகன வரி வசூல் புத்தகங்களை பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story