கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது
கண்டக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் விஜயகுமார்(வயது 42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெயங்கொண்டம் பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திலிருந்து சுத்தமல்லி செல்லும் அரசு பஸ்சில் பயணிகளிடம் டிக்கெட் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அணைக்குடம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அரசு பஸ் புறப்பட்டு தா.பழூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்த வீரமுத்து மகன்கள் மாதேஷ்(26), மணிவண்ணன்(24), தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த புரோஸ்காந்தி மகன் அபின்குமார், முருகன் மகன் வல்லரசு, வைகுந்தன் மகன் கபினேசன் ஆகிய 5 பேரும் பஸ்சை வழிமறித்து ஏறியதாகவும், படியில் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது விஜயகுமார் படியில் பயணம் செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்து, டிக்கெட் எடுக்க கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து மாதேஷ், மணிவண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகிறார்.