மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை அடுத்த அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது36). பிரபல ரவுடியான இவரை ஒரு கும்பல் குத்தி கொலை செய்தது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் (23), ராமசித்தார்த் (26), ஜெபின் (26), ஜோன்ஸ் (34), ஈசாக் என்ற சாம் ஈசாக் (37), அரவிந்த் (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து முருகன் (33) என்பவர் பூதப்பாண்டி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறையில் உள்ள பிரவின், ராமசித்தார்த், அரவிந்த் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சிறையில் உள்ள ஈசாக் என்ற சாம் ஈசாக், ஜோன்ஸ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.