100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சிவகிரி அருகே 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி:
கடந்த வாரம் ஒடிசா மாநிலம் பலங்கேரி பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை வேனில் ஏற்றிக்கொண்டு கேரளா செல்வதற்காக தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி வழியாக வந்து கொண்டிருந்தனர். தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சோதனை சாவடி அருகே சிவகிரி போலீசார், அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழுகிய உருளைக்கிழங்கு மூட்டைகளுக்கு இடையே 100 கிலோ எடை கொண்ட 90 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், இவற்றை கேரளாவுக்கு கடத்திச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் உரிமையாளரும், டிரைவருமான புளியங்குடி கற்பக வீதி தெருவை சேர்ந்த அய்யனு மகன் முருகானந்தம் (வயது 29), அவருக்கு உதவியாளராக இருந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கைதமன மாடி தெருவைச் சேர்ந்த அப்துல் பஷீர் மகன் சியாஸ் பஷீர் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிவகிரி போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பறக்கூடு தாலுகாவைச் சேர்ந்த லத்தீப் மகன் அஜ்மல் (27), திலீப் மகன் அக்பர்அலி (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.