நீலகிரியில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலி
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பசுந்தீவன மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காட்டு யானைகள் விளைநிலங்களை தேடி ஊருக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் நிகழ்ந்து வருகிறது.
மசினகுடி அருகே மாயாறு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 51). இவர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தனது தோட்டத்துக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றார். அப்போது இருளில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென நாகராஜை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கூடலூர் தாலுகா தேவர்சோலை தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மாதேவ்(50). எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 8 மணிக்கு எஸ்டேட் பகுதியில் மின் மோட்டாரை ஆன் செய்வதற்காக மாதேவ் சென்றார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த ஆண் காட்டு யானை மாதேவ்வை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாதேவ் இறந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தேவர்சோலை போலீசார், கூடலூர் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது ஊருக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய காட்டு யானையை பிடிக்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் புதர்கள் நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாதேவ் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முன்வந்தனர்.
ஆனால், தோட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.