2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x

கபடி வீரர் கொலை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கொலை வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே போரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (25), மணிமாறன் (29). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள். இவர்கள் கபடி விளையாடுவதற்காக கிராமத்தில் ஒரு அணி அமைத்து பிற இடங்களில் விளையாட சென்று வந்தனர். அப்போது பார்த்திபன், மணிமாறன் ஆகியோரை கபடி விளையாட அழைத்து செல்லும் இடங்களில் களத்தில் இறங்க அனுமதிக்காமல் மாற்று வீரர்களாக மட்டும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கபடி வீரரான அருண் மீது பார்த்திபன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17-9-2018 அன்று இரவு கபடி விளையாட்டு தொடர்பாக அருணிடம், பார்த்திபன் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அருணை அரிவாளால் பார்த்திபன், மணிமாறன் ஆகியோர் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாா்த்திபன், மணிமாறன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவில் நேற்று நீதிபதி பாபுலால் தீர்ப்பு வழங்கினார். பார்த்திபன், மணிமாறன் ஆகியோருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி 2 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


Next Story