2 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
2 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சங்கிலி பறிப்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் விரிவாக்கம் எஸ்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி திருமகள் (வயது 70).
இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திருமகள் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திருமகள் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சோழபுரம் திருவள்ளூர் நகர் பகுதியைச்சேர்ந்த சோமசுந்தரம் மகன் காரல் மார்க்ஸ் (32), விளந்த கண்டம் கீழத்தெரு பகுதியைச்சேர்ந்த செல்வம் மகன் பிறையரசன் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் எண் 2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட காரல்மார்க்ஸ், பிறையரசன் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.