2 வீடுகளில் கதவை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளை
புளியங்குடி அருகே 2 வீடுகளில் கதவை உடைத்து 7 பவுன் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் வம்சவிருத்தி நகர் சவுபாக்கியா தெருவை சேர்ந்தவர் செல்வம் மனைவி கிருஷ்ணவேணி (வயது 35). இவர் கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
5 நாட்கள் கழித்து தனது வீட்டுக்கு திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.68 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் கண்ணன் (30) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்று விட்டார். அவரது மனைவி பிரசவத்துக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.
இதுதவிர அழகர்சாமி மகன் ராசு என்பவரின் வீட்டிலும் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து உள்ளனர். ஆனால் அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ெகாள்ளை சம்பவங்கள் தொடர்பான புகார்களின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.