அடுத்த மாதம் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி:கோத்தகிரி நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி
அடுத்த மாதம் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுவதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி
அடுத்த மாதம் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெறுவதையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேரு பூங்கா
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா கோத்தகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.
இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக இந்த பூங்கா விளங்கி வருகிறது.
கோடை கண்காட்சி
இந்தநிலையில் வருகிற மே மாதம் 6 மற்றும் 7-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் தற்போது மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு பூங்காவை மேம்படுத்த 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வன விலங்குகள் பூங்காவிற்குள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்று, தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 5 லட்சம் ரூபாய் செலவில் பூங்காவின் ஒரு பகுதியில் வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடும் பணி நடைபெற்றது.
அனுமதி இல்லை
மேலும் ஊழியர்கள் புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்துள்ள புற்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்றி சமப்படுத்தி வருகின்றனர். பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் கட்டும் பணியும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள் ரோஜா தோட்டத்தில் உள்ள பெரும்பாலான செடிகளை சேதப்படுத்தியதால், அதற்கு பதிலாக அங்கு விகுனியா மற்றும் ஆண்டிப்ரோ மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் பழுதடைந்து இருந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி, சிறுவர்களைக் கவரும் வகையில் 9 விதமான புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டன. பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூங்கா பூட்டி வைக்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாரி ஆய்வு
கடந்த இரு தினங்களுக்கு முன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா பூங்காவை ஆய்வு செய்து சிறுவர் விளையாட்டு பூங்காவில் தரைத் தளத்தை புல் தரையாக மாற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு புல் தரையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பழுதடைந்த நடைபாதை ஓரங்களை பழுதுபார்க்கும் பணி மற்றும் வர்ணம் பூசும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.