2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x

சென்னையில் 2 உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

பூந்தமல்லி,

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இந்த பாலம் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143 மற்றும் 144-க்குட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து, யூனியன் சாலையை சிரமமின்றி அடைவதற்கு ஏதுவாக, 4 வழிப் பாதையாக சின்ன நொளம்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது.

2 லட்சம் மக்களுக்கு...

மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து யூனியன் சாலையை இணைக்கும் வகையில் இருவழிப் பாதையாக சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பீட்டிலும் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 2 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படுவதால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைவார்கள்.

அதை தொடர்ந்து மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தரைப்பாலத்தினையும் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்-சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் உடன் சென்றனர். மேயர் பிரியா, கணபதி எம்.எல்.ஏ., துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.


Next Story