கூவம் ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை - ஒருவரின் உடல் மீட்பு
கூவம் ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஒருவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை அம்மா நகர் போலீஸ் பூத் பின்புறம் உள்ள கூவம் ஆற்றில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் பிணம் மிதப்பதாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மற்றும் எழும்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் கூவம் ஆற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கூவம் ஆற்றில் பிணமாக கிடந்தவர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 54) என்பதும், இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு அதிக அளவு குடிபழக்கம் இருப்பதும் தெரிய வந்தது. அவர் எதற்காக கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (55). இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார். நேற்று காலை இவர், பூங்கா ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள பாலத்தின் மீது ஏறி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரப்பர் படகு மூலம் தேவராஜ் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.