வீட்டில் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதாக 2 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கண்ணீர்
வீட்டில் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதாக 2 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கண்ணீருடன் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை
வீட்டில் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதாக 2 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கண்ணீருடன் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரசு பள்ளியில் விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில் நேற்று முன்தினம் கோவையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அலுவலர்கள் அருணா, ஸ்ரீதர் ஆகியோர் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அவர்கள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் மாணவிகளிடம், யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மிரட்டி பாலியல் பலாத்காரம்
அப்போது அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரும், அவரது தங்கையான அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியும் அழுதுகொண்டே அதிகாரிகள் முன்பு வந்தனர்.
பின்னர் அந்த 2 சிறுமிகளும், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். அந்த சிறுமிகள் கூறிய வார்த்தை அங்கு இருந்த அதிகாரிகள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதையடுத்து அந்த சிறுமிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது சிறுமியின் தந்தை அங்கு இல்லை. சிறுமியின் தாய் வீட்டுவேலைகள் செய்வதற்காக சென்றார். அவரை தொடர்புகொண்டு அதிகாரிகள் பேசி வீட்டிற்கு வரவழைத்தனர். அதிகாரிகள் கூறியபிறகு தான் இந்த சம்பவம் தாய்க்கு தெரியவந்தது.
கொடூர தந்தை கைது
இதையடுத்து சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பெற்றக்குழந்தை என்றும் பாராமல் கடந்த ஓர் ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை மீது போக்சோ, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 34 வயதான அவர், திருமண டெக்கரேஷன் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், இவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த பெண் ஒரு மாதத்திலேயே இவருடன் வாழாமல் பிரிந்து சென்று விட்டாராம்.
அதன் பின்னர் மற்றொரு இளம்பெண்ணை அவர் காதலித்து 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத்தான் இந்த 2 பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில்தான் 2 மகள்களையும் அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே கூறினால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிடுவதாகவும், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்கள் வாங்கித்தரமாட்டேன் என்றும் மிரட்டியதும் தெரியவந்தது.
மருத்துவ பரிசோதனை
இதைத்தொடர்ந்து சிறுமிகளின் தந்தையை போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதுபோல் பாதிக்கப்பட்ட சிறுமிகள் 2 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அந்த சிறுமிகள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரை கைதுசெய்து போலீசார் அழைத்து சென்றபோது சிறுமியின் தாய் கொடூர செயலில் ஈடுபட்ட தனது கணவரை தூக்கிலிடுங்கள் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
ஆத்திரம்
குழந்தைகளை கணவனே பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்த தாய் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் தனது கணவர் மீது மிகுந்த ஆத்திரமும் அடைந்தார். 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள் என்று பொத்திப்பொத்தி வளர்தேனே... கடைக்கு கூட பொருட்கள் வாங்க எனது குழந்தைகளை வெளியே அனுப்பமாட்டேனே என்று அழுது புலம்பினார். இதையடுத்து கணவரின் இந்த செயலால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும். எனவே இனி வாழ விருப்பம் இல்லை என்று கூறி தனது குழந்தைகளுடன் அந்த சிறுமிகளின் தாய் தற்கொலை செய்யப்போவதாக கதறினார். அவருக்கு போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் அறிவுரை கூறி தேற்றினர். இதையடுத்து அவர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு கணவர் மீது புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.