சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியில் 2 கார்கள்"அதில் எந்த குற்றமும் இல்லை.."- அமைச்சர் சேகர்பாபு பதிலடி


சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியில் 2 கார்கள்அதில் எந்த குற்றமும் இல்லை..- அமைச்சர் சேகர்பாபு பதிலடி
x

சமயபுரம் கோயி லின் வைப்பு நிதி குறைந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சி,

திமுக ஆட்சி அமைத்தபின் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அந்த நிதியிலிருந்து 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்திற்கு, கோயில் இணை ஆணையர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் என்ற நபர் சமூக வலைதளங்களில் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து பேசுகையில், சமயபுரம் கோயிலின் வைப்பு நிதி 111 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், கோயில் நிர்வாகத்திற்காக பழைய கார்களுக்கு மாற்றாக புதிய கார்களை வாங்குவது வழக்கமானதுதான் என்றும், அதில் எந்த குற்றமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் சமயபுரம் கோயிலின் வைப்பு நிதி காணாமல் போயிருந்தாலோ, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, தற்போது எப்படி வைப்பு நிதி உயர்ந்திருக்கும்? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி, தங்கள் பணி வேகத்தைக் குறைக்கும் நப்பாசையில் இதுபோன்ற விசம பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், சமயபுரம் கோயில் நிதி தொடர்பாக தவறான தகவல் பரப்பியவர் மீது இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story