திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதல்: தச்சு தொழிலாளர்கள் 2 பேர் பலி


திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதல்:  தச்சு தொழிலாளர்கள் 2 பேர் பலி
x

திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தச்சு தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ராஜா (வயது 38). இவருடைய உறவினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்லவேப்பூரை சேர்ந்தவர் கோபால் மகன் கோபி (31).

தச்சு தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், திட்டக்குடி அடுத்த ஆவட்டி கூட்டு ரோட்டில் உள்ள மர பட்டறையில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ராஜாவும், கோபியும் ஒரு மொபட்டில் ராஜா வீட்டுக்கு சாப்பிடுவதற்காக புறப்பட்டனர். மொபட்டை ராஜா ஓட்டினார்.

லாரி மோதியது

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்டு ரோட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களது மொபட் மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி ராஜாவும், கோபியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே லாரி டிரைவர் லாரியை சாலையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டாா்.

போலீசார் விசாரணை

விபத்து பற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story