வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து; பலியான என்ஜினீயர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என பேரிடர் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை- வேளச்சேரி சாலை இணைப்பில் வாகனங்களுக்கான தனியார் கியாஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே 7 மாடி கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 40 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. 'மிக்ஜம்' புயல் காரணமாக கடந்த 4-ந் தேதி கனமழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து வெளியேறிய மழைநீர் 5 பர்லாங் சாலையில் பெருக்கெடுத்து வந்து, சாலை அருகே கட்டுமான பணிக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கியது. இதனால் கட்டுமான பணிக்கு தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்து விழுந்தது. இதில் பள்ளத்தின் அருகில் உள்ள கியாஸ் நிலையத்தின் அலுவலக அறை, கழிவறை ஆகியவை சரிந்து பள்ளத்தில் விழுந்தது. மேலும் சாலையின் ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் மீது வைக்கப்பட்டு இருந்த கட்டுமான நிறுவனத்தின் கன்டெய்னர் பெட்டியும் மண் சரிவில் பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் பள்ளத்தில் சரிந்து விழுந்த கியாஸ் நிலைய கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் 4 பேர் மற்றும் கன்டெய்னர் பெட்டியில் அமர்ந்து இருந்த சிவில் என்ஜினீயர் என 5 பேர் பள்ளத்தில் விழுந்தனர். அதில் 3 ஊழியர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். சிவில் என்ஜினீயர் ஜெயசீலன் (வயது 32) மற்றும் கியாஸ் நிலைய ஊழியர் நரேஷ் (21) ஆகியோர் மட்டும் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கினர். உடனடியாக பேரிடர் குழு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் தொடர்ந்து பெய்த மழையால் பள்ளத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கி 40 அடி ஆழ பள்ளத்தை மூடியது. இதனால் பள்ளத்தில் விழுந்த ஜெயசீலன், நரேஷ் இருவரையும் மீட்க முடியவில்லை. பேரிடர் குழு, தீயணைப்பு துறை, மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் இணைந்து கடந்த 5 நாட்களாக நீரில் மூழ்கிய 2 பேரையும் மீட்க தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். மோட்டார் மூலம் பள்ளத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றியதுடன், மழைநீரில் ரப்பர் படகு மூலம் சென்றும் தேடினர். மழைநீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு பொக்லைன் எந்திரத்தை உள்ளே இறக்கி அதன் மூலம் மண் சரிவை அகற்றி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கியாஸ் நிலைய கட்டிடத்தின் இடுபாடுகளில் சிக்கி பலியான நரேஷ் உடலை மீட்டனர். அவரது பெற்றோர் அடையாளம் காட்டிய பிறகு நரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கன்டெய்னர் பெட்டியுடன் பள்ளத்தில் விழுந்த ஜெயசீலன் உடலை தொடர்ந்து தேடி வந்தனர். நரேஷ் உடல் மீட்கப்பட்டு சுமார் 8 மணிநேரத்துக்கு பள்ளத்தில் சரிந்த மண் அகற்றப்பட்டபோது மதியம் 1.30 மணியளவில் ஜெயசீலன் உடலையும் மீட்டனர். அவரது உடலையும் அவருடைய தந்தை அடையாளம் காட்டிய பிறகு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பள்ளத்தில் சரிந்து விழுந்த 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். 5 நாட்களுக்கு பிறகு 2 பேரையும் மீட்பு குழுவினர் அழுகிய நிலையில் பிணமாக மீட்டனர். கடந்த 4 நாட்களாக அங்கேயே தங்கி இருந்த 2 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.
பலியான சிவில் என்ஜினீயர் ஜெயசீலனுக்கு திருமணமாகி 9 மாதமே ஆகிறது. அவருடைய மனைவி மஞ்சு பிரியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவரை பார்க்காமல் அங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி உறவினர்களுடன் அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 5 நாட்களாக அவர் எதுவும் சாப்பிடாமல் அழுதபடி படுத்தே கிடந்தார்.
இதனை அங்கு ஆய்வு பணிக்கு வந்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிந்து மஞ்சு பிரியாவுக்கு ஆறுதல் கூறினார். ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் மஞ்சு பிரியா மறுத்தார். ஆனாலும் வயிற்றில் வளரும் குழந்தைக்காக சாப்பிட வேண்டும் என்று கூறிய ராதாகிருஷ்ணன், தனக்காக கொண்டு வந்த மோரை அவருக்கு ஊட்டிவிட்டார். மேலும் கர்ப்பிணி மஞ்சு பிரியாவுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறியதாக கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களான எழில் (32), சந்தோஷ் (30) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? எனவும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.