மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது


மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
x

மெக்கானிக்கை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

அரிவாள் வெட்டு

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சிக்கு உட்பட்ட மூவராயன்பாளையத்தை சேர்ந்த செல்வத்தின் மகன் குமரவேல்(வயது 25). மெக்கானிக்கான இவர் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 1-ந்தேதி திருப்பைஞ்சீலியில் நடந்த ஆடிப்பூர தேரோட்டத்தின் போது திருப்பைஞ்சீலி சன்னதி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியின் மகன் செல்வகுமாருக்கும்(22), வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை குமரவேல் விலக்கி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று குமரவேல், தனது பட்டறையில் இருந்தபோது செல்வகுமார் மற்றும் சிலர் அங்கு சென்று அரிவாளால் குமரவேலை வெட்டியதாக தெரிகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து செல்வகுமார், அவருடைய நண்பர் திருப்பைஞ்சீலி தெற்கு தெருவை சேர்ந்த திலகரின் மகன் சதீஷ்(23) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

18 பவுன் நகை திருட்டு

*திருச்சி கருமண்டபம் சக்திநகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது 36). இவர் கடந்த 31-ந்தேதி காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தேனிக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி தென்னூர் மீன்கார தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை (40). வாகன புரோக்கரான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

*திருச்சி வீரமா நகர் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(66). இவர் தனது வீட்டில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் சந்தோஷ் காந்திமார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியை தேடி வருகிறார்.


Next Story