லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே லாரி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் அனில்குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தனித்தனியாக லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இடையே லாரியில் லோடு ஏற்றுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் அனில்குமார் ஏற்பாடு செய்த லாரியில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சிமெண்டு மூலப்பொருளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குசாலை பெட்ரோல் பங்க் அருகில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் சிறுநீர் கழிக்க சென்றார்.
அப்போது அங்கு வந்த ரமேஷ், அவருடைய உதவியாளர் மார்ட்டின் ஆகிய 2 பேரும் இரும்பு கம்பியால் அனில்குமார் ஏற்பாடு செய்த லாரியின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், மார்ட்டின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.