மாமல்லபுரம் அருகே வட மாநில வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
மாமல்லபுரம் அருகே வட மாநில வாலிபரை தாக்கியஇருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலம் பாட்னா நகரை சேர்ந்தவர் நூர்ஆலம் (வயது 20). இவர் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நூர்ஆலம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்பொது அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற நூர்ஆலம் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இறங்கி ஆரன் அடித்தால் ஒதுங்கி செல்ல மாட்டியா என்று நூர் ஆலமிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் நூர் ஆலமை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து நூர்ஆலம் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட 2 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அவர்கள் இருவரையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பூஞ்சேரியை சேர்ந்த திவாகர் (வயது20), கல்பாக்கம் அடுத்த வாயலூர் அழகேசன் நகரை சேர்ந்த ஜேம்ஸ் (29) என்பது தெரியவந்தது. பூஞ்சேரியில் பீகார் வாலிபரை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. பிறகு திவாகர், ஜேம்ஸ் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.