நெரிசலில் சிக்கிய 2 ஆம்புலன்ஸ் வாகனம்


நெரிசலில் சிக்கிய 2 ஆம்புலன்ஸ் வாகனம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் 2 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, விழுப்புரம், கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், திருச்சி, பெரம்பலூர், நெய்வேலி, சேலம், ஈரோடு உள்பட பல்வேறு நகரங்களுக்கும், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையாக துருகம் சாலை விளங்குகிறது. இந்த சாலையை கடைக்காரர்கள் தங்களுடைய பொருட்களை வைத்தும், விளம்பர பதாகை களை வைத்தும் ஆக்கிரமித்துள்ளனர். அதுமட்டுமின்றி கடைகளுக்கு வருபவர்களும் தங்களது இரசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் துருகம் சாலை குறுகிப்போய்விடுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதன் காரணமாக துருகம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை 10.45 மணியளவிலும் துருகம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையோரத்தில் தாறுமாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததாலும், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் எதிரும், புதிருமாக வந்து நின்றதாலும் அந்த சாலை ஸ்தம்பித்தது.

சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம்

இந்த போக்குவரத்து நெரிசலில் 2 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கி தவித்தது. நோயாளிகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அந்த 2 ஆம்புலன்ஸ் வாகனமும் ஒலியை எழுப்பியபடி நின்றது. இருப்பினும் எந்த வாகனமும் அசையாமல் அப்படியே நின்றது.

அந்த சமயத்தில் அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் இல்லை. இதனால் போக்குவரத்தை சீர் செய்ய யாரும் முன்வரவில்லை. இதன் காரணமாக துருகம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

நிரந்தர தீர்வு தேவை

இது பற்றி அறிந்ததும் ஊர்க்காவல்படையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களின் முயற்சியால் 30 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. அதன் பிறகே ஆம்புலன்ஸ் வாகனம் ஊர்ந்து சென்றது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்காமல் இருக்க துருகம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், போலீசாரை பணியில் அமர்ந்தி துருகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கை ஆகும்.


Next Story