மாமல்லபுரம் பேரூராட்சியில் 2 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்
மாமல்லபுரம் பேரூராட்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் 2 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி தேர்தல் நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சியில் நடந்த நர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் 9 வார்டில் அ.தி.மு.க.வும், 4 வார்டில் தி.மு.க.வும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி நடந்த பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக வாக்கெடுப்பு நடந்தது. இதில் 9 வாக்குகள் பெற்று அ.தி.மு.க.வை சேர்ந்த 11-வது வார்டு கவுன்சிலர் வளர்மதி பேரூராட்சி தலைவராகவும், 9 வாக்குகள் பெற்று அ.தி.மு.க.வை சேர்ந்த 15- வது வார்டு கவுன்சிலர் ராகவன் பேரூராட்சி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து 3-வது முறையாக மாமல்லபுரம் பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 9-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் பி.எஸ்.பூபதி தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.இந்த நிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன், 12-வது வார்டு கவுன்சிலர் சரிதா ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து திடீரென விலகி காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பொருளாளரும், முன்னாள் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவருமான விசுவநாதன் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை நேரில் சந்தித்து இருவரும் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
2 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்ததால் மாமல்லபுரம் பேரூராட்சியில் ம.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ஆதரவுடன் தி.மு.க.வின் பலம் 8-ஆக அதிகரித்து பெரும்பாண்மை கிடைத்துள்ளதால் விரைவில் தற்போதுள்ள அ.தி.மு.க. வை சேர்ந்த பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் என இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்கள் 8 பேரும் தெரிவித்துள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் முன்னிலையில் தி.மு.கவின் இணைந்த கவுன்சிலர்கள் இருவரும் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தபோது தி.மு.க. கவுன்சிலர்கள் மோகன்குமார், கஜலட்சுமி, பூபதி, லதாகுப்புசாமி, வள்ளி ராமச்சந்திரன், ம.தி.மு.க. கவுன்சிலர் துர்காசினிசத்யா, மற்றும் தி.மு.க.வினர் திரண்டு வந்து அவர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்ததை காண முடிந்தது.