18 லட்சம் பேர் காத்திருப்பு: குருப் 4 தேர்வு - மார்ச் இறுதிக்குள் வெளியீடு
குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னை,
397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந் தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.
அதைத் தொடர்ந்து தேர்வாணையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை வெளியிட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படியும் கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கடந்த மாதம் 14-ந் தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இது ஓரளவுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதே தேர்வை எழுதிய 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வை எழுதிய தேர்வர்கள் டுவிட்டரில் 'வி வான்ட் குரூப்4 ரிசல்ட்' என்பதை 'ஹேஷ்டேக்'காக 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருப்பதற்கு தேர்வர்கள் 'மீம்ஸ்' மூலம் நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி.யிடம் சொல்வதுபோல, 'வீட்டுல எவ்வளவு நாள்தாண்டா சோறு சாப்பிடுவனு கேக்குறாங்க. சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கலையாடா வீட்லயே இருக்கனு சொல்றாங்க', 'எக்சாம் நல்லா பண்ணிருக்கேன், இந்த மாதம் ரிசல்ட் மட்டும் விட்டீங்கனா வேலைக்கு போய்டுவேன்' என பதிவிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் -4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிய கதியில் நடைபெற்று வருகிறது என டிஎன்பிஎஸ் சி விளக்கம் அளித்துள்ளது. குரூப் -4 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆன நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.