17-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல் தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு


17-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல் தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு
x

சிவகாசி அருகே உள்ள 17-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல் தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள 17-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கல் தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டது.

தண்ணீர் தொட்டி

சிவகாசி அருகே உள்ள எட்டக்காபட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பழங்கால கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகில் கல்லால் உருவாக்கப்பட்ட தண்ணீர் தொட்டி இருக்கிறது. இந்த தொட்டியின் ஒரு பகுதியில் 4 வரிகள் தமிழில் எழுதப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், தொல்லியல் ஆய்வாளர் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த கல் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தார். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கந்தசாமி கூறியதாவது:-

கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து அதனை தொட்டியில் சேகரித்து பயன்படுத்த வசதியாக இந்த கல் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கலாம். இந்த தொட்டியின் ஒரு பகுதியில் பார்த்தீப வருடம் பங்குனி மாதத்தில் சின்னச்சங்கர வன்னியன் என்பவர் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து சேரிகத்து வைக்க கல் தொட்டி அமைத்து கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

17-ம் நூற்றாண்டு

இந்த கல் தொட்டி 17-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 250 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிணற்று தண்ணீரை புனிதநீராக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கிணற்றின் அருகில் காலணி அணிந்து செல்லக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. பெண்கள் குளிக்க வசதியாக தனி தொட்டியும், உடைகள் மாற்ற தனி இடமும் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கல் தண்ணீர் தொட்டியில் தற்போது வர்ணம் பூசப்பட்டதால் அதில் எழுதி உள்ள வரிகளை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் மற்றும் பொது இடங்களில் உள்ள கல்வெட்டுக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதன் மீது வர்ணம் பூசி அதில் உள்ள தகவல்களை நாம் மறைக்க கூடாது. உலக பாரம்பரிய தினமான இன்று பாரம்பரிய அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story