பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் சென்னை வந்தடைந்தனர்...!
அமர்நாத் புனித யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை,
அமர்நாத் புனித யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் தமிழ்நாடு அரசின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நேற்றிரவு சென்னை திரும்பிய அவர்களை, அமைச்சர் மஸ்தான் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்கள், தமிழ்நாடு திரும்பும் போது (சங்கர், முருகானந்தம். செல்லபாண்டி, செல்வி, செந்தில்குமார், ராஜாங்கம், சங்கர், கீதா, கிருஷ்ணவேனி, சாவித்திரி சந்திரசேகரன், கலைவாணி, சொர்ணலதா, கண்ணன், அமுதா. ராகினி, ராஜேஸ்குமரி) அமர்நாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
இத்தகவல் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வரப்பெற்றவுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்திரவின்படி பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டு 13.07 2023 அன்று புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.
மேற்காணும் 17 நபர்களும், தமிழ்நாடு அரசின் மூலம் பயணச்சீட்டுகள் பெற்றுத்தரப்பட்டு நேற்று (15.07.2023) ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.