ரூ.1,630 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்-அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் கே.என்.நேரு ரூ.1,630 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் கே.என்.நேரு ரூ.1,630 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
ரூ.609 கோடியில் குடிநீர் திட்ட பணி
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் காலையில் தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நெல்லைக்கு வருகிறார். காலை 11.30 மணிக்கு ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் நடைபெறும் விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் முன்னிலை வகிக்கிறார்.
இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.609 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அதாவது ரூ.605¾ கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி ஆற்றை நீராதாரமாக கொண்டு ராதாபுரம், வள்ளியூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, களக்காடு ஆகிய 6 யூனியன்களில் உள்ள 831 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ரூ.3.21 கோடி செலவில் கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகளில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
முடிவுற்ற பணிகள்
மாலை 4 மணி அளவில் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில், நெல்லை மாநகராட்சியில் ரூ.427.56 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். அதாவது ரூ.295 கோடி செலவில் முடிக்கப்பட்ட 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.56.71 கோடி செலவில் கட்டப்பட்ட பொருட்காட்சி மைதான வர்த்தக மையம், ரூ.23.14 கோடியில் நெல்லை எம்.ஜி.ஆர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள பன்னடுக்கு இருசக்கர வாகன காப்பகம், ரூ.11.97 கோடி மதிப்பிலான நேருஜி கலையரங்கம், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கருப்பந்துறை, வண்ணார்பேட்டை பகுதியில் 3 இடங்களில் சலவைத்துறைகள், ரூ.12.31 கோடியில் 6 பசுமை பூங்கா, ரூ.8.40 கோடியில் 9 இடங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, ரூ.2.22 கோடியில் 9 இடங்களில் நகர்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
சங்கரன்கோவில்
பின்னர் மாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகில் நடைபெறும் விழாவில் ரூ.593.70 கோடியில் முடிவுற்ற கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். விழாவில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.