தொழில்துறையினர் 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்


தொழில்துறையினர் 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 2:15 AM IST (Updated: 11 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

நிலைகட்டணம் உயர்வு, பீக்ஹவர்ஸ் கட்டணம் உயர்வு ரத்து செய்யப்படாததால், வருகிற 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்
நிலைகட்டணம் உயர்வு, பீக்ஹவர்ஸ் கட்டணம் உயர்வு ரத்து செய்யப்படாததால், வருகிற 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

மின் கட்டண உயர்வு

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி உள்ளோம். ஆனால் இதுவரை மின்கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களுக்கு 430 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். அதிலும் நிலைகட்டணம், பீக்ஹவர்ஸ் கட்டண உயர்வால் தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் எங்களது சிரமத்தை கொஞ்சமும் பரிசீலிக்கவில்லை.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை காப்பாற்ற இந்த கூட்டமைப்பை தொடங்கினோம். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.

16-ந்தேதி உண்ணாவிரதம்

முதல்-அமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்சினைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளதும் திருப்தி அளிக்கவில்லை.

சூரிய ஒளி பேனல் அமைப்பவர்களுக்கு 50 சதவீத கட்டணமுறை, பீக்ஹவர்ஸ் கட்டணத்துக்கு மீட்டர் பொருத்தும்வரை நிறுத்திவைப்பு என்பதைவிட, முழுமையான ரத்து என்ற அறிவிப்பு வந்தால்தான் தொழில்துறை காப்பாற்றப்படும்.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 16-ந்தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள்.

முழுமையாக ரத்து செய்யப்பட்டால் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முதல்- மைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூட்டமைப்பின் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், மணி, சவுந்திரகுமார், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story