1552 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்


1552 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 2-ம் கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1552 தொடக்கப்பள்ளிகளில் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 2-ம் கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1552 தொடக்கப்பள்ளிகளில் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காலை உணவு திட்டம்

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மதுரையில் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

காலை வேளைகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாப்பிடாமல் வரக் கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டமானது தொடங்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் 14 பள்ளிகளிலும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகளிலும் மற்றும் திருவத்திபுரம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும் என மொத்தம் 64 பள்ளிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1552 தொடக்கப்பள்ளிகளில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு காலை உணவு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 2-ம் கட்டமாக வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 1552 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 92 ஆயிரத்து 184 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

இந்த திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அந்தந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் தாய்மார்களை உணவு தயார் செய்யும் பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

ஏன் என்றால் தன் குழந்தை பள்ளியில் படிக்கிறது என்பதால் அக்கறையுடன் தூய்மையான முறையில் உணவுகளை தயார் செய்வார்கள் என்பதால் இப்பணி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story