புத்தாண்டையொட்டி ரெயில் நிலையங்களில் 1,500 போலீசார் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 1,500 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை,
ஆங்கில புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 1,500 ரெயில்வே போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் 70 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதிக்கப்பட்டு வருகிறது. திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, ரெயில் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருட் களை பயணிகள் கண்டால் அதுகுறித்து அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மோப்பநாய் உதவி
முக்கிய ரெயில் நிலையங்களான சென்னை சென்டிரல், எழும்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் நிலையத்தின் ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.