ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
திருவாரூரில் நாளை நடக்கும் ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணிக்கு 1,500 போலீசார் நியமிக்கபட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நாளை நடக்கும் ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணிக்கு 1,500 போலீசார் நியமிக்கபட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆழித்தேரோட்டம்
திருவாரூா் தியாகராஜர் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இந்த தேரோட்ட பாதுகாப்பு பணியில். போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், 54 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,535 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
தேரோட்டத்தின் போது குற்றங்களை தடுக்க 10 கிரைம் அணி அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும். போக்குவரத்தை மாற்று பாதையில் செலுத்தவும் 200 போக்குவரத்து போலீசார் நியமிக்கபட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் கங்களாஞ்சேரி, திருக்கண்ணமங்கை, ஈ.பி.ஜங்சன், விளமல் புதுப்பாலம், ரெயில்வே மேம்பாலம், சோழா தியேட்டர் சந்திப்பு, நியூ பாரத் பள்ளி, கொடிக்கால்பாளையம் ரோடு சந்திப்பு, வாளைவாய்க்கால் சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி, தியாகராஜர் கல்வி நிறுவனம் எதிர்புறம், குமரன்கோவில் பின்புறம், நியூ பாரத் பள்ளி, அம்மா உணவகம் எதிர்புறம், மார்க்கெட்டிங் கமிட்டி, லெட்சுமி மகால் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரோந்து வாகனங்கள்
தேரோட்டத்திற்கு வரும் பெண் பக்தர்களிடம் நகை திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார், சாதாரண உடையில் பணியில் ஈடுபடுவார்கள். தேரோட்டத்தின்போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. திருவாரூர் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
அன்னதானம்
தேரோடும் நான்கு வீதிகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நகராட்சிஅலுவலகம் சந்திப்பு, தென்றல் நகர் சந்திப்பு, கொடிக்கால்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.