150 ஏக்கர் பருத்தி செடிகள் நீரில் மூழ்கி அழுகின


150 ஏக்கர் பருத்தி செடிகள் நீரில் மூழ்கி அழுகின
x

150 ஏக்கர் பருத்தி செடிகள் நீரில் மூழ்கி அழுகின.

அரியலூர்

தா.பழூர்:

கதவுகள் சரியில்லாத மதகு

மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் கோடாலிக்கருப்பூர் பகுதியில் உள்ள பூவோடையின் 7 கண் மதகு வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றில் கலக்கும்.

இந்நிலையில் அந்த மதகில் உள்ள கதவுகள் சரியாக இல்லாததால், தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் 7 கண் மதகு வழியாக பூவோடையில் புகுந்தது. பூவோடையில் இருந்து அருகில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்திற்குள் வெள்ளநீர் புகுந்து, பருத்தி செடிகளை மூழ்கடித்தது. தற்போது பருத்திச் செடிகள் முற்றிலும் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கிவிட்டது.

பருத்தி செடிகள் நாசமானது

செடியில் இருந்த பருத்தி உதிர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பருத்தியை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. நல்ல விளைச்சல் இருந்த நிலையில், இந்த ஆண்டு பருத்தி அறுவடை மூலம் ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பருத்திவயலில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பருத்தி அறுவடை செய்ய முடியாமல் நாசமாகியுள்ளது. மேலும் முற்றிலும் பருத்தி செடிகள் அழுகியதால், அடுத்தடுத்த அறுவடைகளில் கிடைக்க வேண்டிய வருமானமும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் பருத்தி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்ய ஒவ்வொரு விவசாயியும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், நாசமான பருத்தி வயல்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் அதே பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள் அறுவடைக்கு தயாராக இருந்தநிலையில், தற்போது வெள்ளநீர் புகுந்து பாதிப்படைந்துள்ளன. இந்த வயல்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story