தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிக்கிடந்த 15 டன் கழிவுகள் தரம்பிரித்து அகற்றும் பணி தீவிரம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிக்கிடந்த 15 டன் கழிவுகள் தரம்பிரித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கழிவுகள் எரியூட்டும் பணிகளும் 1 ஆண்டுக்குப்பிறகு தொடங்கி உள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிக்கிடந்த 15 டன் கழிவுகள் தரம்பிரித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கழிவுகள் எரியூட்டும் பணிகளும் 1 ஆண்டுக்குப்பிறகு தொடங்கி உள்ளது.
கழிவுகள் எரியூட்டும் கருவி
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து உள்நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆஸ்பத்திரியில் சேகரிக்கப்படும் கழிவுகள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே குவிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு எரியூட்டப்பட்டு வந்தன. இதற்காக முன்னாள் மருத்துவ மாணவர்கள் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எரியூட்டும் கருவியும் வழங்கப்பட்டு அது செயல்பட்டு வந்தது.
செயல்படவில்லை
இந்த நிலையில் நாளடையில் இந்த கருவி செயல்படவில்லை. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக எரியூட்டும் கருவி செயல்படாமல் இருந்தது. இதையடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த பகுதியில் மலைபோல குப்பைகள் தேங்கிக்கிடந்தன. இந்த குப்பைகளை அகற்ற தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் உதவியுடன் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்லூரி துப்புரவு பணியாளர்களுடன், மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ கழிவுகள் தனியாகவும், இதர கழிவுகள் தனியாகவும் தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
15 டன் கழிவுகள் தேக்கம்
இங்கு தேங்கிக்கிடந்த 15 டன் கழிவுகளில், 11 டன் கழிவுகள் வரை தரம் பிரிக்கப்பட்டு விட்டன. இதில் மருத்துவ கழிவுகள், மருந்து வினியோகம் செய்யும் நிறுவனத்துக்கே அனுப்பப்படுகின்றன. பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இதர பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அங்கேயே எரியூட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இதற்கான தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 1 ஆண்டுக்கு பிறகு தற்போது எரியூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சேவியர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். இன்னும் சில நாட்களில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.