லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம்


லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம்
x

லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி

லால்குடி அருகே அரசு கலைக்கல்லூரியில் போராட்டத்தின்போது பொருட்களை சூறையாடிய 15 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பொருட்கள் சூறையாடல்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றிய கவுரவ பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 24-ந்தேதி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரி அலுவலகம், ஆய்வகம், கணினி அறை என பல்வேறு இடங்களில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாணவர்களால் சூறையாடப்பட்டன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் விக்னேஷ், துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் ஆகியோர் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வணிகவியல் துறை கவுரவ பேராசிரியர் வினோத்குமார் (வயது 33) கைது செய்யப்பட்டார்.

15 மாணவர்கள் இடைநீக்கம்

இந்த நிலையில் மாணவர்களால் சூறையாடப்பட்ட பொருட்களின் மதிப்பை கல்லூரி நிர்வாகம் கணக்கிட்டது. மேலும் இந்த செயலில் ஈடுபட்ட 15 மாணவர்களை கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் கண்டறிந்தனர்.

பின்னர் 15 மாணவர்களின் பெற்றோர், போலீசார், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 15 மாணவர்களையும் நேற்று முன்தினம் முதல் 15 நாட்களுக்கு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 15 பேரும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தவும் கல்லூரி முதல்வர் மாரியம்மாள் உத்தரவிட்டுள்ளார்.


Next Story